Paris Olympics | Javelin Throw | ‘அர்ஷத் நதீமிற்கு தங்கம், நீராஜ் சோப்ராவிற்கு சில்வர்’

பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் தங்கமும், இந்தியாவின் நீராஜ் சோப்ரா சில்வரும் வென்று இருக்கின்றனர்.
எந்த ஒரு சர்வதேச களத்திலும் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிக் கொண்டால், அது ஒரு மிகப்பெரிய பிரளயமாக தான் இருக்கும். ஒரு பக்கம் வீரர்கள் களத்தில் மோதிக் கொண்டால் இரு நாட்டின் ரசிகர்களும் இணையங்களிலும் சமூக வலை தளங்களிலும் மோதிக் கொள்வர். ஆனால் இந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் பாகிஸ்தானின் அர்ஷத் நதீமும், இந்தியாவின் நீராஜ் சோப்ராவும் ஈட்டி எறிதல் பிரிவில் மோதிக் கொள்ளும் போது இருவருக்குமான ஆதரவு என்பது இரு நாடுகளிடம் இருந்தும் இரு நாட்டு ரசிகர்களிடமும் இருந்து கிடைத்து வந்தது.
இந்த நிலையில் தான் பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் பிரிவின் இறுதிப் போட்டியில் இருவருமே அதகளமாக விளையாடினர். ஒரு பக்கம் ஒலிம்பிக் ரெக்கார்டை எல்லாம் உடைத்து 92.97 மீட்டர் தூரம் எறிந்து பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் தங்கம் வென்று இருக்கிறார். இன்னொரு பக்கம் அதற்கு அடுத்தபடியாக 89.45 மீட்டர் தூரம் எறிந்த இந்தியாவின் நீராஜ் சோப்ரா சில்வர் வென்று இருக்கிறார். இருவரின் பதக்க வெற்றியையும் இந்திய – பாகிஸ்தான் ரசிகர்கள் இணைந்து கொண்டாடி வருகின்றனர்.
” நதீமின் வெற்றியை இந்திய ரசிகர்களும், நீராஜ் சோப்ராவின் வெற்றியை பாகிஸ்தான் ரசிகர்களும் கொண்டாடி வருவது, விளையாட்டு இரு நாடுகளை பிளவு படுத்துவதில்லை, பிணைக்கவும் செய்யும் என்பதை நிரூபித்து இருக்கிறது “